மாவட்ட செய்திகள்

செஞ்சி அருகே ஜெயின் கோவிலில் கொள்ளைபோன 4 சிலைகள் வனப்பகுதியில் கண்டெடுப்பு ; போலீசார் கைப்பற்றி விசாரணை + "||" + Finding the 4 Idols in the Jain Temple near the Red Cross in the Forest; Police seize and investigate

செஞ்சி அருகே ஜெயின் கோவிலில் கொள்ளைபோன 4 சிலைகள் வனப்பகுதியில் கண்டெடுப்பு ; போலீசார் கைப்பற்றி விசாரணை

செஞ்சி அருகே ஜெயின் கோவிலில் கொள்ளைபோன 4 சிலைகள் வனப்பகுதியில் கண்டெடுப்பு ; போலீசார் கைப்பற்றி விசாரணை
செஞ்சி அருகே ஜெயின் கோவிலில் கொள்ளை போன 4 சிலைகள் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில் பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்குள் கடந்த மாதம் 15-ந்தேதி நள்ளிரவு கதவு பூட்டுகளை அறுத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த 35-க்கும் மேற்பட்ட சாமி சிலைகளில் 2 மல்லிநாதர் சிலைகள், தரனேந்திரர் சிலை, பத்மாவதி சிலை, ஜோலாமாலினி சிலை, 2 பார்சுவநாதர் சிலைகள் மற்றும் விளக்கு ஏந்தி நிற்கும் பெண் சிலை ஒன்றையும் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கொள்ளை போன சிலைகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் செஞ்சியில் இருந்து அத்தியூர் செல்லும் சாலையோரம் உள்ள காரை காப்புக்காடு வனப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து, அந்த மூட்டையை பிரித்து பார்த்தார். அதில் 4 சிலைகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி அனந்தபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஜீவராஜ், மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தனிப்பிரிவு ஏட்டு சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாக்கு மூட்டையில் இருந்த சிலைகளை கைப்பற்றினர். பின்னர் இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் 15-ந்தேதி நள்ளிரவு பெரும்புகை ஜெயின் கோவிலில் கொள்ளை போன ஒரு அடி உயரம் உள்ள மல்லிநாதர் சிலை ஒன்றும், அரை அடி உயரமுள்ள 2 பார்சுவநாதர் சிலைகள், விளக்கு ஏந்தியபடி நிற்கும் பெண் சிலை ஒன்று என மொத்தம் 4 சிலைகள் என்பது தெரியவந்தது. மேலும் சாக்குமூட்டையில் கிடந்த மல்லிநாதர் சிலையின் இடது தோள்பட்டை பகுதி சேதமடைந்து காணப்பட்டது.

சிலைகள் கண்டெடுக்கப் பட்டது குறித்து போலீசார் கூறுகையில், பெரும்புகை ஜெயின் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மர்மநபர்கள் ஐம்பொன் சிலைகளா? என சோதனை செய்துள்ளனர். அதில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட 1½ அடி உயர உயரமுள்ள மல்லிநாதர், தரனேந்திரர், பத்மாவதி, ஜோலாமாலினி ஆகிய சிலைகளை எடுத்துக் கொண்டு, பித்தளையால் செய்யப்பட்ட ஒரு அடி உயர மல்லிநாதர், 2 பார்சுவநாதர் சிலைகள் உள்பட 4 சிலைகளை சாக்கு மூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசி சென்று இருக்கலாம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதோடு, சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகிறோம் என்றனர்.