ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு: பதுக்கி வைத்து விற்ற மதுபாட்டில்களை பறித்து அழித்த இளைஞர்கள்


ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு: பதுக்கி வைத்து விற்ற மதுபாட்டில்களை பறித்து அழித்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 9:47 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே பதுக்கி வைத்து விற்ற மதுபாட்டில்களை இளைஞர்கள் பறித்து அழித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரத்தில் களமிறங்கிய இளைஞர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

சேத்தியாத்தோப்பு, 


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது கானூர் கிராமம். இந்த கிராமத்தில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். இவர்களிடம் குடிபிரியர்கள் மது வாங்கி அருந்திவிட்டு போதை தலைக்கேறியதும், பள்ளி, கல்லூரி மாணவிகளையும், அவ்வழியாக செல்லும் பெண்களையும் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே அப்பகுதி இளைஞர்கள், மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களிடம் இங்கு மதுபாட்டில்கள் விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மதுபாட்டில்களை விற்று வந்தனர். இதுபற்றி கிராமத்தினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் கானூர் வாய்க்கால் கரையோரம் சாக்குப்பையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒருவர் விற்பனை செய்து கொண்டிருந்ததார். இதை அறிந்த கானூர் கிராம இளைஞர்கள் அங்கு விரைந்து சென்று அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறித்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அந்த இளைஞர்கள் அந்த மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைத்து அழித்தனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்துவது குறித்து போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இளைஞர்களே மதுபாட்டில்களை பறித்து அழித்து நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இளைஞர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

Next Story