தாராபுரம், வீரபாண்டி பகுதிகளில் வெறி நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் செத்தன


தாராபுரம், வீரபாண்டி பகுதிகளில் வெறி நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 10:04 PM GMT)

தாராபுரம் மற்றும் வீரபாண்டி பகுதிகளில் வெறிநாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் செத்தன.

தாராபுரம், 


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சகுனிபாளையம் சஞ்சீவி தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 37) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இதற்காக தனது தோட்டத்தில் கம்பிவேலி போட்டு பட்டி அமைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் ஆடுகளை பட்டிக்குள் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டார். நேற்று அதிகாலை 4 மணிக்கு பட்டியிலிருந்த ஆடுகள் சத்தம்போட்டன. சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த செல்லத்துரை, உடனே பட்டிக்கு சென்று பார்த்தார்.

அப்போது, கம்பிவேலிக்கு அருகே பெரிய குழியை பறித்து சுமார் 10 நாய்கள் பட்டிக்குள் புகுந்து இருந்தன. அவை பட்டியில் இருந்த ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நாய்களை அங்கிருந்து விரட்டினார். நாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பரிதாபமாக செத்தன.

மேலும் ஆடுகளை கடித்து குதறும் தெரு நாய்களை, கிராமங்களிலிருந்து துரத்தும் போது, அவைகள் நகருக்குள் புகுந்து தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை கடித்து குதறிவிடுகிறது. நாய்களுக்கு பயந்து குழந்தைகள் தெருக்களில் விளையாட முடியாத நிலை இருப்பதால், தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் வீரபாண்டியை அடுத்த கல்லாங்காடு வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான மோகன் என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று வந்த ஆடுகளை அன்று இரவு வீட்டின் அருகில் அவற்றை கட்டிவைத்தார். இந்த நிலையில் இரவு 12 மணி அளவில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு மோகன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 4 வெறிநாய்கள் ஆடுகளை கடித்துக்கொண்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன், அருகில் கிடந்த குச்சியை எடுத்து வெறிநாய்களை அடித்து விரட்டினார். ஆனால் வெறிநாய்கள் கடித்ததில் 5 ஆடுகள் செத்து விட்டன. இதுகுறித்து திருப்பூர் வீரபாண்டி போலீசார் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு சென்றுபார்வையிட்டனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது “இப்பகுதியில் அதிகளவில் வெறிநாய்கள் சுற்றித்திரிவதாகவும், இரவு நேரங்களில் வேலை முடிந்து செல்லும் நபர்களை துரத்தி கடிப்பதோடு, ஆடு, கோழிகளை கடித்து கொன்றுவிடுகின்றன. எனவே வெறிநாய்களை பிடிக்க வேண்டும்” என்றனர். 

Next Story