சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்


சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:16 PM GMT (Updated: 11 Oct 2018 10:16 PM GMT)

சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருபுவனை,

திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டுபாளையம் ஊரல் குட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக சாராயக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையால் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே சாராயக்கடையை மூட வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாராயக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் சாராயக்கடை அகற்றப்படவில்லை.

இந்தநிலையில் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக நேற்று கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்துபோக மறுத்து, வாக்குவாதம் செய்தனர்.

மேலும் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கொடுத்த வாக்குறுதிப்படி சாராயக் கடையை அகற்றவில்லை. எனவே நீங்கள் (போலீசார்) கூறுவதை நம்பமாட்டோம் என்று தெரிவித்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கோபிகா எம்.எல்.ஏ., போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சாராயக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் உறுதி கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story