உளுந்தூர்பேட்டை அருகே; பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்துச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறைஞ்சி பகுதியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி கோமதி (வயது 38). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அங்கு அவர் பொருட்கள் வாங்கியதும் மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 பேர், மொபட் சக்கரத்தில் சேலை சிக்கியுள்ளதாக கோமதியிடம் கூறினர். இதை நம்பிய கோமதி உடனே மொபட்டை சாலையோரம் நிறுத்த முயன்றார். அப்போது அவர்கள் 2 பேரும், கண்ணிமைக்கும் நேரத்தில் கோமதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
இதில் பதறிய கோமதி திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். அப்போது தான் கோமதிக்கு மொபட் சக்கரத்தில் சேலை சிக்கியதாக கூறி தன்னுடைய கவனத்தை திசை திருப்பி நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.
பறிபோன நகையின் மதிப்பு ரூ.85 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோமதி எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story