கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது சரக்கு வேன் பறிமுதல்


கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது சரக்கு வேன் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:30 PM GMT (Updated: 12 Oct 2018 5:28 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், பறக்கும் படை தனிதாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் சலீம்பாட்ஷா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் குருபரப்பள்ளி - பங்காரப்பேட்டை சாலையில் உள்ள சிந்தகும்மனப்பள்ளி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3.25 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த அரிசி கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக தர்மபுரி மாவட்டம் கடகத்தூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் முனியப்பன் (வயது 21) என்பவரை அதிகாரிகள் பிடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிந்து முனியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பார்வையிட்டு, கைது செய்யப்பட்ட முனியப்பனிடம் விசாரணை நடத்தினார். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

Next Story