பழனி முருகன் கோவிலில்: 16 நாட்களில் உண்டியல் வருமானம் ரூ.1½ கோடி


பழனி முருகன் கோவிலில்: 16 நாட்களில் உண்டியல் வருமானம் ரூ.1½ கோடி
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 12 Oct 2018 5:54 PM GMT)

பழனி முருகன் கோவிலில், 16 நாட்களில் உண்டியல்கள் மூலம் ரூ.1½ கோடி வருமானமாக கிடைத்துள்ளது.

பழனி, 


பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 26-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் 16 நாட்களுக்கு பிறகு, நேற்று மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

இதில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 13 ஆயிரத்து 570-ஐ பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் ½ கிலோ (514 கிராம்), வெள்ளி 7 கிலோ (7,110 கிராம்), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 414-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

இது தவிர தங்க வேல், சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளிப்பாதம், வெள்ளி காவடி, கிரீடம் மற்றும் வெள்ளி பொருட்களும், பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கடிகாரம், பட்டு வேட்டி போன்ற பல்வேறு பொருட்களும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் பழனியில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பழனி மகளிர் கலை கல்லூரி மாணவிகள், சமுதாய பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், நாதசுர, தவில் கல்லூரி மாணவர்கள், கோவில் அலுவலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Next Story