நத்தம் அருகே, பள்ளி மாணவி மர்ம சாவு : சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மறியல்


நத்தம் அருகே, பள்ளி மாணவி மர்ம சாவு : சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 13 Oct 2018 12:10 AM GMT)

நத்தம் அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நத்தம், 


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கல்வேளிபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. அவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 16). இவர் நத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், வீட்டில் இருந்து மாயமானார். பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் சிவரஞ்சனி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உறவினர்கள் அங்கு திரண்டனர். பின்னர் சிவரஞ்சனியை மீட்க முயன்றனர். ஆனால் அது முடியவில்லை.

இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கயிறு கட்டி சிவரஞ்சனியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதற்கிடையே தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சிவரஞ்சனியின் பெற்றோர் நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மாணவி சிவரஞ்சனியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் காலதாமதம் செய்வதாகவும் கூறி உறவினர்கள், மருத்துவமனை முன்பு நத்தம்-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், தாசில்தார் ஜான்பாஸ்டின் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் உடலை உடனே பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் மறியலை கைவிட்டனர். மேலும் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story