அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் மறியல்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 12 Oct 2018 11:00 PM GMT (Updated: 12 Oct 2018 6:32 PM GMT)

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் கிராம மக்கள் 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஏற்காடு,

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் வெள்ளக்கடை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பொதுக்கிணறு ஒன்று வெட்டப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு கிணற்றின் தடுப்பு சுவர் இடிய தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. திடீரென்று புதிய கிணறு அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழைய கிணறு இடிந்து விழுந்தது.

இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடிநீர் கிடைக்காதால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் குடத்துடன் தண்ணீருக்காக அலைந்தனர். இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். குடிநீர் வினியோகிக்க எந்த ஏற்பாடும் அதிகாரிகள் பண்ணவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வெள்ளக்கடை கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று ஒன்று திரண்டு சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து மறியலில் கலந்து கொண்டனர். பொதுமக்களின் இந்த திடீர் மறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். கழிப்பறை, மயான வசதி, குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுத்தால் தான் மறியலை கைவிடுவோம் என்றனர்.

இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் பேசும்போது, தற்சமயத்துக்கு தனியார் கிணற்றில் இருந்து தண்ணீரை வாங்கி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதாகவும், பாதியில் நிறுத்தப்பட்ட கிணற்று பணியை மீண்டும் தொடங்கி நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கப்படும். மற்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய மறியல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்த மறியலால் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மறியல் கைவிடப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீராக 3 மணி நேரம் ஆனது.

Next Story