குண்டும், குழியுமான கூடலூர்– பார்வுட் சாலை வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான கூடலூர்– பார்வுட் சாலை வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 13 Oct 2018 3:30 AM IST (Updated: 13 Oct 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் இருந்து பார்வுட் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் செக்‌ஷன்–17 நிலங்கள் உள்ளன. இங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக குடியிருப்புகள், பள்ளிக்கூட கட்டிடங்கள் மற்றும் சாலைகளை சீரமைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் இருந்து ஓவேலி பார்வுட் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இதனால் ஓவேலி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அடுத்த சில மாதங்களில் சாலை மீண்டும் பழுதடைய தொடங்கியது. தற்போது கூடலூர் பாலவாடி முதல் பார்வுட் வரையிலான அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:–

கூடலூர் பகுதியில் பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளதால், போராட்டங்களுக்கு பிறகே சாலை வசதி பெற வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு போராடி பெற்ற சாலையை தரமாக அமைக்க அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதன் காரணமாக விரைவில் பழுதாகி குண்டும், குழியுமாக மாறி விடுகிறது. இதனால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் உடனடியாக அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே கூடலூர்– பார்வுட் சாலையை தரமாக சீரமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story