கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை


கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை
x
தினத்தந்தி 13 Oct 2018 3:45 AM IST (Updated: 13 Oct 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஹரிபதே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவருக்கும் பாவஞ்ஜே கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

அந்த பெண் தனது மகள், மகனுடன் பாவஞ்ஜே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ரமேஷ் தனது கள்ளக்காதலியின் வீட்டுக்கு செல்லும்போது, அந்த பெண்ணின் மகளான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக அந்த சிறுமி, தனது தாய் மற்றும் சகோதரனிடம் தெரிவித்துள்ளாள். ஆனால் அவர்கள் ரமேசுக்கு ஆதரவாக இருந்ததுடன், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் இதுபற்றி வெளியே சொல்லவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரமேஷ், கள்ளக்காதலியின் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தாள்.

இந்த நிலையில், அந்த சிறுமி படித்த பள்ளியில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த சிறுமி தனக்கு நடக்கும் கொடுமைகளை தன்னுடைய ஆசிரியரிடம் கூறி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், இதுதொடர்பாக முல்கி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் முல்கி போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். பின்னர், அவர் மீது மங்களூருவில் உள்ள பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி, போலீசார் குற்றப்பத்திரிைகயை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த விசாரணையின்போது, குற்றவாளிக்கு ஆதரவாக சிறுமியின் தாயும், சகோதரனும் சாட்சி அளித்தனர். இந்த வழக்கு மங்களூரு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி பல்லவி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியின் சாட்சியத்தின் அடிப்படையிலும், போலீசார் அளித்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையிலும் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, ரமேசுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையில் ரூ.20 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சகோதரனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

Next Story