அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்,
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பவானி, அமராவதி, திருமூர்த்தி, ஆழியாறு அணைக்கட்டுகளில் மழைகாலங்களில் கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரி, குளம், குட்டைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டமான அத்திக்கடவு–அவினாசி திட்டம், ஆனைமலை–நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைகள் மற்றும் ஏரி குளம், குட்டைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும். நொய்யலாறு, நல்லாறு, கவுசிகா நதி ஆகிய அணைகளில் உள்ள நீர் வழிப்பாதையை தூர்வார நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.