டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், மீனவர்கள் சாலை மறியல் : 300 பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது
டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விசைப்படகு ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தின் தலைமையில் நடைபெற்ற நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மீனவர்கள் நாகை புத்தூர் ரவுண்டானா, புத்தூர் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசலை வழங்கவேண்டும். ஆந்திரா மாநிலத்தில் பெரிய படகுக்கு 6 ஆயிரம் லிட்டரும், சிறிய படகுக்கு 500 லிட்டரும் மானிய டீசல் வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்.
இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இலங்கை அரசு சிறைபிடித்துள்ள 173 தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில விசைப்படகுகளுக்கு இழப்பீடாக ஒரு படகுக்கு ரூ. 50 லட்சம் வழங்கவேண்டும். டீசல் விலை உயர்வை கண்டித்தும், மீன்பிடி தொழிலையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் திட்டமான மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தையும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடங்களுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சென்று திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வேளாங்கண்ணி, காரைக்கால், திருச்சி, நாகை சாலைகளில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story