தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு


தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2018 5:00 AM IST (Updated: 13 Oct 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று போக்குவரத்து அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் 2 முறை முடிவு செய்யப்பட்டு, திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று பெங்களூரு கிருஷ்ணா ்இல்லத்தில் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து மந்திரி டி.சி.தம்மண்ணா, தலைமை செயலாளர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மந்திரி டி.சி.தம்மண்ணா, “டீசல் விலை உயர்வால், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. சுமார் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இழப்பை சரிக்கட்ட பஸ் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டுமென்றால், பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டியது அவசியம்” என்றார். போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர்.

இதை கேட்ட குமாரசாமி, தற்போதைக்கு பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும், நஷ்டத்தை எப்படி குறைப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “போக்குவரத்து கழகங்களின் பிரச்சினை குறித்து விவாதித்தோம். போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை அனுபவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர். கடைசியாக டீசல் விலை ரூ.58 ஆக இருந்த போது, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது டீசல் விலை சுமார் ரூ.75 ஆக உள்ளது.

போக்குவரத்து கழகங்களை காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் பொதுமக்கள் மீது சுமை ஏற்படுத்தக்கூடாது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி பஸ் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story