மு.க.அழகிரியுடன் தினகரன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற மு.க.அழகிரியுடன் தினகரன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலைமான் பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று காலை நடந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பது உலகத்திற்கு தெரியும். அந்த கோட்டையில் கொடியேற்றி விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றனர். இதில் நம்மை எதிர்க்கும் எதிரிகள், உதிரிகள் எல்லாம் கூட்டணி வைத்துக்கொள்கின்றனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள தினகரன், தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைத்துள்ள அழகிரியுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளார் என்று ஒரு செய்தி உலா வருகிறது. அதன்படி திருவாரூரில் அழகிரியை வெற்றி பெற வைக்கவும், திருப்பரங்குன்றத்தில் தினகரன் அணியை வெற்றி பெற செய்யவும் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. யார் கள்ளக்கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்து விட முடியாது. திருப்பரங்குன்றம் தேர்தல் தள்ளி போனதற்கு காரணம் தி.மு.க. போட்ட வழக்கு தான். அந்த வழக்கு விசாரணை 27–ந் தேதி முடிவுக்கு வருகிறது. அதன் பின்பு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரியபுள்ளான், அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, நிர்வாகிகள் அய்யப்பன், தமிழரசன், வெற்றிவேல், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,‘ தேர்தல் ஆணையம் ஏற்கனவே அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தங்கள் பதவியில் செயல்படலாம் என அனுமதி அளித்து, நாங்கள் அதன்படி தேர்தலையும் சந்தித்து விட்டோம். அ.ம.மு.க. கட்சிக்கு தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மத்தியிலும் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தான் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காகவே தினகரன் ஒரு கட்சியை உருவாக்கினார். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு தான் அவரை வெளியேற்றினோம். திருப்பரங்குன்றம் தொகுதியில்சாதனைகளை விளக்கும் வகையில் வருகிற 24–ந் தேதி பெண்கள் மட்டும் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடத்த உள்ளோம். என்றார்.