ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்தது


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 7:57 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்த நிறுவனத்திற்கும், ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீராச்சாமி, முருகானந்தம், நாகராஜன், நகர செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் புலிகேசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போகும் தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதே போல மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் நீடாமங்கலம் தலைமை தபால் நிலையம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை ஆர்ப்பாட்டக்குழுவினர் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்து இருந்தனர்.

கோட்டூர் தபால் நிலையம் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், சவுந்தர்ராஜன், சிவசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாத்திட ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

வலங்கைமான் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் தெட்சிணாமூர்த்தி, ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வீரமணி, உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன், ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, கண்ணையன், பாலசுப்பிரமணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரி தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் கேசவராஜ், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், மணி, ஜெயபால், கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கூத்தாநல்லூர் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தவபாண்டியன் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்தும், தமிழக மக்களையும், கனிம வளங்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், ஒன்றிய துணை செயலாளர் ராகவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜாங்கம், மாதர் சங்க செயலாளர் மீனாம்பிகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story