வீடுகள், நிறுவனங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - ராஜபாளையம் நகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை


வீடுகள், நிறுவனங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் - ராஜபாளையம் நகராட்சி கமி‌ஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2018 3:00 AM IST (Updated: 13 Oct 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஆய்வின்போது வீடுகள், நிறுவனங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ராஜபாளையம் நகராட்சி கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியும், அதன் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் பொதுமக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் ஆறிய பின்பு பயன்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு பணிக்காக வீடுகளுக்கு கொசு மருந்து தெளிப்பதற்கு வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தேவையற்ற பாத்திரங்கள், தேங்காய் சிரட்டைகள், உரல்கள், டயர்கள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பராமரித்து, சுற்றப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை ஆய்வின்போது வீடுகள், வியாபார நிறுவனங்களில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,

மேலும் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் போது, சுய வைத்தியம் செய்யாமல், தாமதமின்றி நகராட்சி சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story