பசும்பொன்னில் பிளக்ஸ் போர்டு வைக்க முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் - கலெக்டர் உத்தரவு


பசும்பொன்னில் பிளக்ஸ் போர்டு வைக்க முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2018 3:15 AM IST (Updated: 13 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பிளக்ஸ் போர்டு வைக்க முன்கூட்டியே அனுமதிபெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வருகிற 28, 29, மற்றும் 30–ந்தேதிகளில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி தரப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் நேரம் ஒதுக்கித்தர வேண்டிய விண்ணப்பம் அளிக்க வேண்டும். தலைவர்களுடன் செல்லும்போது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மேலும், தலைவர்களது வாகனம் மற்றும் அதனுடன் செல்லும் 2 வாகனங்கள் பற்றிய விவரத்தினை நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே அதாவது வருகிற 23–ந்தேதிக்கு முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவித்து வாகன அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும்.

இதேபோல பிளக்ஸ் போர்டுகள் வைத்துக்கொள்ள பசும்பொன் கிராமத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி கோருபவர்கள் வருகிற 15–ந்தேதி முதல் 25–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி கோருபவர்கள் அதற்காக கமுதியில் தாலுகா அலுவலகத்தில் உள்ள குழுவினரிடம் மனு அளித்து முன் அனுமதிபெற வேண்டும். விண்ணப்பங்கள் இக்குழுவினரால் முறையாக பரிசீலிக்கப்பட்டு அரசு விதிகள் மட்டும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் அளித்த 24 மணி நேரத்திற்குள் உத்தரவுகள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதி எண் பிளக்ஸ் போர்டில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் பிளக்ஸ் போர்டுகளை 27–ந்தேதி வைத்து விட்டு 31–ந்தேதி காலையில் அகற்றி விட வேண்டும்.

அன்னதானம் வழங்குபவர்கள் கமுதி தாலுகா அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள ஒற்றை சாரள முறை குழுவினரிடம் விண்ணப்பங்களை அளித்து முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை 15–ந்தேதி முதல் 24–ந்தேதிக்குள் வழங்கலாம். அன்னதானம் வழங்குபவர்கள் சரியான முறையில் பந்தல் மற்றும் பிற வசதிகள் செய்துள்ளதை உறுதி செய்து அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்னதானம் வழங்கும்போதும், விழா நிகழ்ச்சியின்போதும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை தவிர்க்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story