ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கல்யாணசுந்தரம், காசிநாதன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா குழுமத்துடன் மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும். மத்தியஅரசின் சதி செயலுக்கு தமிழகஅரசு துணை போகாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். காவிரி டெல்டாவை பாலைவனமாக்காமல் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மத்தியஅரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story