அந்தியூர் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த நாட்டுவெடி வெடித்து பெண்ணின் கை சிதைந்தது
அந்தியூர் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த நாட்டுவெடி வெடித்து பெண்ணின் கை சிதைந்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 55). கூலி தொழிலாளர்கள். நேற்று காலை கணவனும், மனைவியும் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார்கள். அதன்பின்னர் மதியம் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்கள்.
வரும் வழியில் தோட்டத்து பாதை ஓரம் ஒரு துணி பந்து கிடந்தது. அது என்னவென்று பார்ப்பதற்காக பழனியம்மாள் கையில் எடுத்து அமுக்கி பார்த்தார். அப்போது அது ‘டமார்‘ என்ற சத்தத்துடன் வெடித்தது. இதில் பழனியம்மாளின் வலது கை சிதைந்தது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தார்கள். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பழனியம்மாள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று வெடித்த பொருளை ஆய்வு செய்து பார்த்தார்கள். அப்போது அது காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்திருந்த நாட்டுவெடி என்று தெரிந்தது.
காட்டுப்பன்றிகளை வேட்டையாடுபவர்கள், பாறைகளை உடைக்க பயன்படும் வெடி மருந்தை துணிகளால் இறுக கட்டி பந்துபோல் உருவாக்குவார்கள். பின்னர் அதன்மேல் மாட்டுக்கொழுப்பை தடவி தோட்டத்து பகுதியில் வீசிவிடுவார்கள்.
தோட்டத்து பயிர்களை தின்பதற்காக வரும் காட்டுப்பன்றிகள் இதுபோல் வீசப்பட்ட நாட்டுவெடி பந்தை கடிக்கும்போது அது வெடித்து பன்றி இறந்துவிடும். அதன்பின்னர் பன்றியின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்றுவிடுவதாக தெரிகிறது. இதுபோல் 10 நாட்டு வெடிகளை சம்பவ இடத்தில் போலீசார் கண்டுபிடித்து எடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து நாட்டு வெடியை அந்த பகுதியில் போட்டு வைத்தது யார்? என்று அந்தியூர் போலீசாரும், வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.