மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி - கருங்கல் அருகே பரிதாபம்


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி - கருங்கல் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 13 Oct 2018 3:30 AM IST (Updated: 13 Oct 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கருங்கல், 


குமரி மாவட்டம் கருங்கல் அருகே தொழிக்கோடு குட்டி அடப்புவிளை பகுதியை சேர்ந்தவர் ஜேசுதாஸ். தொழிலாளி. இவருடைய மகன் பாபு ஆன்டணிராஜ் (வயது 29), கட்டிட தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் அபின் (23). இவர் டிப்ளமோ என்ஜினீயர். இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். பாபு ஆன்டணிராஜூடன், அபினும் தற்காலிகமாக கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று இருவரும் கட்டிட வேலைக்கு செல்லவில்லை. இதனால் 2 பேரும் மாலை 3.30 மணியளவில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கருங்கல் மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பாபு ஆன்டணி ராஜ் ஓட்டினார்.

கருங்கல்- தேங்காப்பட்டணம் சாலையில் பாலூர் பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை ஆன்டணிராஜ் முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிரே மேல்மிடாலத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாபு ஆன்டணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அபின் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அபினும் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story