சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி- மயக்கம்


சத்துணவு முட்டை சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி- மயக்கம்
x
தினத்தந்தி 13 Oct 2018 4:00 AM IST (Updated: 13 Oct 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டி அருகே அரசு பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 14 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே நாகமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் 215 பேருக்கு நேற்று மதியம் சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.

இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ராஜா, அஜய், சிவராஜ், மாணவிகள் திவ்யா, காவியா, கீதா, சரண்யா, ரஞ்சனி, கார்த்திகா, கீதாகுமாரி, பவித்ரா, சவுமியா, தேவிகா, தீபிகா ஆகிய 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விளாங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கெட்டுப்போன முட்டையை மாணவ, மாணவிகள் சாப்பிட்டதால், அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். பின்னர் அவர்களை மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story