தூத்துக்குடி பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்றிய கவர்னர் “தூய்மை பணி செய்வதை பெருமையாக கொள்ள வேண்டும்” என அறிவுரை


தூத்துக்குடி பஸ் நிலையத்தில் குப்பைகளை அகற்றிய கவர்னர் “தூய்மை பணி செய்வதை பெருமையாக கொள்ள வேண்டும்” என அறிவுரை
x
தினத்தந்தி 13 Oct 2018 4:00 AM IST (Updated: 13 Oct 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குப்பைகளை அகற்றினார். முன்னதாக அவர், “தூய்மை பணி செய்வதை பெருமையாக கொள்ள வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி, 


தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரவு நெல்லையில் ஓய்வெடுத்தார். நேற்று காலையில் நெல்லையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.

தொடர்ந்து காலை 10.22 மணிக்கு தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு அவர் சென்றார். அங்கு பள்ளிக்கூட வாயிலில் அவரை மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக 18 லோடு ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அந்த பள்ளிக்கூடத்தில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்துக்கு சென்றார். அங்கு உள்ள குழந்தைகளை சந்தித்து, அவர்களுக்கு பழங்களையும், பூக்களையும் வழங்கி உரையாடினார்.

அந்த மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பையும் பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்துக்கு சென்ற அவர், அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா?, சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வருகிறீர்கள். நீங்கள் வசிக்கும் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் அம்மாவிடம் சென்று கூற வேண்டும். வீட்டில் நடக்கும் தூய்மை பணியில் நீங்களும் கலந்து கொண்டு அம்மாவுக்கு உதவ வேண்டும்.

தூத்துக்குடி தூய்மையான நகரங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும். எல்லோருக்கும் அந்த கடமை உள்ளது. பத்திரிகையாளர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. நானும் பத்திரிகையாளர்தான். நாம் தூய்மை பணி செய்வதை பெருமையாக கொள்ள வேண்டும். அதே போன்று நாம் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும். அந்த உறுதி மொழி நமது ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். உறுதிமொழி ஏற்கும் இந்த நாள் மிகவும் புனிதமான நாள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தூய்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை கவர்னர் ஆங்கிலத்தில் வாசிக்க, மாணவர்கள் அதையே திரும்ப கூறினர். பின்னர் ஒரு மாணவி உறுதிமொழியை தமிழில் கூறினார். அப்போது அதிக மாணவர்கள் சத்தமாக உறுதிமொழி ஏற்றனர். இதனால் அந்த மாணவியை, சிறந்த நிர்வாகியாக வருவார் என்று கவர்னர் பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால், கவர்னர் பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் தேஷ்மோக் சேகர், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன் மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித், தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வந்தார். தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் முன்பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். இதனால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

அதன்பிறகு பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். அங்கு நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Next Story