போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் ; 8-ம் வகுப்பு புதிய சான்று வழங்க கோரிக்கை


போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் ; 8-ம் வகுப்பு புதிய சான்று வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 9:30 PM GMT)

கோவில்பட்டியில் தொலைந்து போன 8-ம் வகுப்பு சான்றுக்கு பதிலாக புதிய சான்று கேட்டு போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்தார். பேச்சுவார்த்தை நடத்தி அவரை போலீசார் பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

கோவில்பட்டி, 


கோவில்பட்டியை அடுத்த வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜோதி ரமேஷ் (வயது 20). கூலி தொழிலாளி. இவரது 8-ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தொலைந்து விட்டது.

எனவே அவர் புதிய மாற்று சான்றிதழ் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ள போலீஸ் ஒயர்லெஸ் கோபுரத்தில் ஏறினார்.

அந்த கோபுரத்தில் சுமார் 100 அடி உயரத்தில் ஏறிய அவர், தனக்கு புதிய மாற்று சான்றிதழ் தர வேண்டும், இல்லையெனில் இங்கிருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார். அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தாசில்தார் பரமசிவன், கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஒயர்லெஸ் கோபுரத்தில் இருந்த அவரிடம் அதிகாரிகள் ஒலிப்பெருக்கி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவருடைய பெற்றோர், உறவினர்களை அதிகாரிகள் அங்கு வரவழைத்தனர். பெற்றோர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து காலை 6.30 மணி அளவில் அந்த கோபுரத்தில் இருந்து அவர் கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story