அதிகாரிகள் குழு விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் திருச்சி விமான நிலைய இயக்குனர் பேட்டி


அதிகாரிகள் குழு விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் திருச்சி விமான நிலைய இயக்குனர் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2018 4:15 AM IST (Updated: 13 Oct 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் குழு விசாரணைக்கு பின்னரே, விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று திருச்சி விமான நிலைய இயக்குனர் கூறினார்.

திருச்சி,

திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை துபாய்க்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால் சுற்றுச்சுவரின் மேல் பகுதி இடிந்து விழுந்ததோடு, ஓடுபாதை அருகில் இருந்த ஆண்டெனா மற்றும் கண்காணிப்பு கருவிகளும் சேதம் அடைந்தன. விபத்து ஏற்பட்ட பகுதியை நேற்று காலை திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு தலைவர் ப.குமார் எம்.பி, திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அதன் பின்னர் குணசேகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விபத்துக்குள்ளான விமானம் போயிங்- 737 ரகத்தை சேர்ந்தது ஆகும். அந்த விமானத்தில் 130 பயணிகள், 6 ஊழியர்கள் என மொத்தம் 136 பேர் இருந்தனர். இந்த விமானம் ஓடு பாதையில் இருந்து எழும்பி வானில் பறந்து செல்ல முயன்றபோது தான் விபத்தில் சிக்கி இருக்கிறது.
ஓடுபாதையில் குறிப்பிட்ட தூரம் வந்ததும் விமானம் மேலே பறக்க தயாராகி விடும். இந்த குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி விமானம் பறக்க முயன்றதால் தான் சுற்றுச்சுவரில் சக்கரங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்து உள்ளது.

விபத்துக்கான உண்மையான காரணம் என்பது பற்றி டெல்லி மற்றும் சென்னையில் இருந்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்தின் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தும். அந்த குழுவின் முழு விசாரணைக்கு பின்னரே உண்மையான காரணம் தெரியவரும்.

இந்த விபத்தினால் விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் இயக்கத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்தது பற்றி உடனடியாக மேலதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு மற்ற விமானங்களை இயக்கி வருகிறோம்.

சேதம் அடைந்த ஐ.எல்.எஸ். கருவிகளை சீரமைக்கும் பணி முடிவடைய 20 நாட்கள் ஆகும். இதற்கான தொழில் நுட்ப வல்லுனர் குழுவினர் சென்னையில் இருந்து வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற விமானத்தை மஸ்கட்டில் தரை இறங்க அனுமதிக்கவில்லை என்பது தவறான தகவல் ஆகும்.

விமானத்தின் சக்கரம் மற்றும் டயர்கள் சேதம் அடைந்து இருந்ததால் வெளிநாட்டில் அதனை தரை இறக்கும்போது பல சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தான் துபாயில் தரை இறங்குவதற்கு சுமார் 30 நிமிட நேரத்திற்கு முன்பாக மும்பையில் தரை இறங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story