வேப்பூர் அருகே: பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் நகை பறிப்பு - மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


வேப்பூர் அருகே: பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் நகை பறிப்பு - மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Oct 2018 9:45 PM GMT (Updated: 12 Oct 2018 10:15 PM GMT)

வேப்பூர் அருகே பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பூர், 


வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 60). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் வேப்பூரில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று இவர் வழக்கம் போல் விடுதிக்கு வந்துவிட்டார். வீட்டில் இவரது மனைவி வள்ளியம்மாள் மட்டும் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கந்தசாமியின் வீட்டுக்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், தான் சித்த வைத்தியர் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய வள்ளியம்மாள் அந்த நபரிடம் சர்க்கரை நோய்க்கு மருந்து தருவீர்களா? என்று கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர் ஒரு பச்சிலை மருந்தை வள்ளியம்மாளிடம் கொடுத்துள்ளார். அதைசாப்பிட்ட அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை அவர் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன்மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து வள்ளியம்மாள் எழுந்து பார்த்தபோது, கழுத்தில் கிடந்த சங்கிலி காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். பின்னர் தனது கணவர் கந்தசாமியிடம் நடந்ததை பற்றி கூறினார். இதையடுத்து கந்தசாமி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Next Story