மாவட்ட செய்திகள்

கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்கக்கோரி ஆடு,மாடுகளுடன் பொதுமக்கள் சாலைமறியல் + "||" + Veterinary Clinic Reopen again People with goats and cattle the roadblock

கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்கக்கோரி ஆடு,மாடுகளுடன் பொதுமக்கள் சாலைமறியல்

கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்கக்கோரி ஆடு,மாடுகளுடன் பொதுமக்கள் சாலைமறியல்
வேலூர் அருகே கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்கக்கோரி ஆடு, மாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்,

வேலூர் மாநகராட்சி 48-வது வார்டில் உள்ள விஸ்வநாத நகரில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கால்நடை மருத்துவமனைக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு முருக்கேரி கிராமத்தில் ரூ.25 லட்சத்தில் நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டது.


இதனால், விஸ்வநாத நகர், அண்ணாநகர், நாகராஜ் நகர் உள்பட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சிரமப்பட்டுவந்தனர். எனவே விஸ்வநாதநகரில் மீண்டும் கால்நடை மருத்துவமனையை திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதநகர் பகுதி மக்கள் நேற்று காலை ஆடு, மாடுகளுடன் பென்னாத்தூரில் இருந்து அரியூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒருசிலர் நாய் மற்றும் பூனையையும் கொண்டுவந்திருந்தனர். மறியல் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களை கைதுசெய்வதுடன், தங்களுடைய ஆடு, மாடுகளையும் கைது செய்யுங்கள் என்று கூறி அவர்களே மாடுகளை போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.