வளசரவாக்கம் பகுதியில் வழிப்பறி செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்கள் பறிமுதல்
வளசரவாக்கம் பகுதியில் பலரிடம் வழிப்பறி செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம் மற்றும் ராயலா நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் கல்லூரி மற்றும் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் இருந்தும், தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்தும் செல்போன்கள் பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
45 செல்போன்கள் பறிமுதல்
இதுகுறித்து வந்த புகார்களின் பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து திருட்டு போன மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களை சேகரித்து கணினி குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் அந்த செல்போன்களை தற்போது யார் வைத்துள்ளார்கள்? என்பதை கண்டறிந்தனர்.
அந்த வகையில் வழிப்பறி செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 45 செல்போன்களை அதை பயன்படுத்தியவர்களிடம் போலீசார் மீட்டனர். அவற்றை பயன்படுத்தியவர்கள், அந்த செல்போன்களை பர்மா பஜாரில் உள்ள கடைகளில் வாங்கியதாக தெரிவித்தனர். மர்மநபர்கள், செல்போன்களை வழிப்பறி செய்து விட்டு அதனை பர்மா பஜார் கடைகளில் விற்று வந்திருப்பது தெரியவந்தது.
திருட்டு செல்போன்களை வாங்கிய கடைக்காரர்களை தேடும்பணி நடைபெற்று வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story