சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகள்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2,300 அலங்கார ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் (வயது 37) அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்தார். அவர் கொண்டுவந்த உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சிவப்பு காது ஆமைகள்
அவரிடம் இருந்த 6 அட்டைபெட்டிகளை ‘ஸ்கேனிங்’ செய்தபோது, அதில் ஏதோ ஒரு பொருள் உயிருடன் நடமாடுவதுபோல் தெரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த அட்டைபெட்டிகளை பிரித்து பார்த்தனர்.
அதில் 2,300 சிவப்பு காது அலங்கார ஆமைகள் இருந்ததை கண்டனர். உடனடியாக இதுபற்றி மத்திய வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலையத்துக்கு விரைந்து வந்த வன உயிரின அதிகாரிகள், அந்த ஆமைகளை ஆய்வு செய்தனர்.
திருப்பி அனுப்பினர்
இந்த வகையான ஆமைகள், குளிர்பிரதேசங்களில் வாழும் என்றும், இந்த ஆமைகள் முறையான மருத்துவ சோதனைகள் செய்யாமல் கடத்தப்பட்டு வந்ததால் நோய் கிருமிகள் தொற்று ஏற்படும் என்றும் தெரிவித்தனர். எனவே அந்த ஆமைகளை மீண்டும் தாய்லாந்துக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,300 சிவப்பு காது அலங்கார ஆமைகளை, மீண்டும் வேறொரு விமானத்தில் தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முகமது யூனுசிடம் மத்திய வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story