கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 13 Oct 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கடை முன்பு திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வீராசாமி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகள் மத்தியில் மதுக்கடை ஒன்று ஏற்கனவே அமைந்து இருந்தது.

இந்த மதுக்கடைக்கு செல்லக்கூடியவர்கள், அந்த வழியாக செல்லும் பெண்களையும், மாணவிகளையும் குடிபோதையில் ஆபாசமாக பேசி வருவதாக புகார் கூறி கடையை அகற்ற கோரி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஆண்டு பல முறை போராட்டம் நடத்தினர்.

கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ந்தேதி நடத்தப்பட்ட போராட்டத்திற்கு பிறகு இன்னும் 2 மாதத்திற்குள் மதுக்கடை மூடப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி மதுக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு இருப்பில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் அனைத்தும் முழுமையாக தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதனையடுத்து மதுக்கடையும் அப்போது மூடப்பட்டது.

இத்தகைய சூழலில் தற்போது நேற்று அதே இடத்தில் மீண்டும் மதுக்கடை திறக்க உள்ளதாகவும், அதற்காக கடைக்கு ஏற்கனவே மதுபாட்டில்கள் வந்து இறங்கி விட்டதாகவும் அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

இதனையடுத்து பொதுமக்கள் 50 பேர் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடை முன்பு திரண்டனர். அவர்கள் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க கூடாது என கோஷம் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி வருவாய்த்துறை அதிகாரிகள் உமாசங்கரி, தாமோதரன் கிராம நிர்வாக அதிகாரி ஆமோஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உரிய கருத்து கேட்கப்பட்ட பின்னர் தான் எந்த வித முடிவும் எடுக்கப்படும். அது வரை கடை திறக்கப்படாது என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story