தாமிரபரணி மகா புஷ்கர விழா: நெல்லைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரிப்பு ஆற்றில் புனித நீராடி வழிபாடு


தாமிரபரணி மகா புஷ்கர விழா: நெல்லைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரிப்பு ஆற்றில் புனித நீராடி வழிபாடு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 6:30 PM GMT)

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி நெல்லைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

நெல்லை,

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி நெல்லைக்கு வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் ஆற்றில் புனித நீராடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

மகா புஷ்கர விழா

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் உள்ள 143 படித்துறைகளிலும், 60-க்கும் மேற்பட்ட தீர்த்தக்கட்டங்களிலும் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

பாபநாசம் பாபநாசசாமி கோவில் படித்துறை, அம்பை, அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர், முக்கூடல், தென்திருப்புவனம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, தைப்பூச மண்டப படித்துறை, குட்டத்துறை படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறை ஆகிய இடங்களில் தினமும் மாலையில் மேளதாளங்கள் முழங்க மகா ஆரத்தி தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.

பக்தர்கள் குவிந்தனர்

புஷ்கரத்தையொட்டி சென்னை, கும்பகோணம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், விருத்தாசலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் நெல்லைக்கு வந்த குவிந்து வருகின்றனர். அவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்கிறார்கள். புனித நீராட வருகின்ற பக்தர்களுக்கு நெல்லை மாநகரத்தில் ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறையில் வருடத்தில் 2 முறை சுப்பிரமணியசுவாமி தீர்த்தவாரி நடப்பதால் அங்கு ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். இதேபோல் தைப்பூசமண்டபத்தில் நெல்லையப்பருக்கு வருடத்தில் 2 முறை தீர்த்தவாரி நடப்பதாலும், தைப்பூச மண்டப படித்துறையில் திருஞானசம்பந்தர் புனித நீராடி, நெல்லையப்பரை புகழ்ந்து பாடினார் என்று புராணங்கள் கூறுவதாலும் அங்கு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

வெளிமாநிலத்தவர் வருகை அதிகரிப்பு

இதேபோல் எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயு படித்துறையில் ராமபிரான், ஜடாயுக்கு தர்ப்பணம் கொடுத்த இடம் என்பதாலும், மேலும் புறவழிச்சாலை ஆற்றுபாலம் அருகில் இருப்பதாலும் அங்கு வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழக பக்தர்களும் நீராடி வருகின்றனர். பின்னர் அங்குள்ள ராமலிங்க சுவாமியையும், கோசாலை கிருஷ்ணரையும், காட்டு ராமரையும், ஜடாயு தீர்த்தத்தில் உள்ள லட்சுமி நாராயணரையும் வழிபட்டு செல்கின்றனர்.

மேலும், நெல்லைக்கு ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு வருகின்ற ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை 4 மணியில் இருந்து நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வெளிமாநில பக்தர்கள் வருவதால் நெல்லையில் உள்ள லாட்ஜ்கள், விடுதிகள், ஓட்டல்கள் அனைத்தும் முன்பதிவாகி கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருமண மண்டபங்களை, ஆதீன மடங்கள் வாடகைக்கு எடுத்து பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளன. அந்த மண்டபங்களில் வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

தானம்

புஷ்கரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்கள் தானம் வழங்கவேண்டும் என்று கூறப்படுகிறது. 3-வது நாளான நேற்று வெல்லம், காய்கறி, பழங்கள் தானம் கொடுக்கவேண்டும் என்பதால் படித்துறை பகுதியில் அமர்ந்து உள்ள சாமியார்களுக்கும், துறவிகளுக்கும், தாமிரபரணியில் புனித நீராட வந்த வெளிமாநில பக்தர்கள் அவற்றை வழங்கினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பக்தர்கள் தைப்பூசமண்டப படித்துறையில் புனித நீராடி துறவிகளுக்கு பழங்களை வழங்கினார்கள். தைப்பூச மண்டப படித்துறையில் புனித நீராடிய பக்தர்கள் அங்குள்ள ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவிலில் வழிபட்டு சென்றனர்.

இதேபோல் புஷ்கரத்துக்கு வந்த பக்தர்கள் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று காலை முதல் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திருநெல்வேலி அல்வா வாங்கவும் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை கைலாசபுரம் கைலாசநாதர் கோவிலில் புஷ்கர விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 5-30 மணிக்கு மங்கள இசையும் நடந்தது. காலை 9 மணிக்கு ருத்ர ஜெபமும், சிறப்பு யாகமும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது.

வைணவ திருவிழா

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஆண்டாள் கலையரங்கத்தில் நேற்று காலையில் வைணவ திருவிழா நடந்தது. இதில் பொங்கும் பதிவு, அரியவேண்டி ஐம்பொருள், ஆறும் ஆழ்வாரும், வைணவ திருத்தலங்களில் தீர்த்தங்கள், திருக்குறுங்குடி பதிகம் என்ற தலைப்பில் பலர் பேசினார்கள். இதைத்தொடர்ந்து மாலையில் திருக்குறுங்குடி ஜீயர், ஆழ்வார்திருநகரி ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், மன்னார்குடி ஜீயர், கொங்கு மண்டல நாராயண ராமானுஜ ஜீயர் உள்ளிட்ட ஜீயர்களும், மடாதிபதிகளும் கலந்து கொண்டு எட்டெழுத்து பெருமாள், சக்கரத்தாழ்வாருடன் ஊர்வலமாக கோசாலை ஜடாயு படித்துறைக்கு வந்தனர். அங்கு மகா ஆரத்தி நடந்தது. இதைத்தொடர்ந்து அங்கு நீராடிய பக்தர்கள் ஜீயர்களிடம் ஆசி பெற்றனர்.

முன்னதாக அங்கு திரிபுர பைரவி யாகமும், சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது.

Next Story