விருதுநகரில் முன்னறிவிப்பு இன்றி பஸ் நிறுத்த மாற்றத்தால் பொதுமக்கள் அவதி


விருதுநகரில் முன்னறிவிப்பு இன்றி பஸ் நிறுத்த மாற்றத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Oct 2018 9:45 PM GMT (Updated: 13 Oct 2018 6:44 PM GMT)

விருதுநகர் ஆற்றுப்பாலம் அருகே பஸ் நிறுத்தம் முன் அறிவிப்பு இன்றி மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றம் தொடர்பான அறிவிப்பு பலகைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ஆற்றுப்பாலம் அருகே பஸ் நிறுத்தம் செயல்பட்டு வந்தது. வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும், விருதுநகரில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை செல்லும் பஸ்களும் இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலை சீரமைப்பை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை காரணம் கூறி இந்த பஸ் நிறுத்தம் திடீரென மாற்றப்பட்டது. மாற்றத்தின்படி இந்த பஸ் நிறுத்தம் ஆற்றுப்பாலத்தை தாண்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் டி.டி.கே. ரோடு தொடங்கும் இடத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றுப்பாலத்தை தாண்டி உள்ள நிறுத்ததில் மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி பஸ்கள் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

முறையான அறிவிப்பு இன்றி பஸ் நிறுத்தங்கள் மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆற்றுப்பாலத்தை தாண்டி அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்துக்கு 300 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியோரும், பெண்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பஸ் நிறுத்தங்களை மாற்றம் செய்வதுடன் அதுபற்றிய முறையான அறிவிப்புகளையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு பலகைகளையும் வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story