தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்


தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:00 PM GMT (Updated: 13 Oct 2018 7:14 PM GMT)

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கமல்ஹாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்து உள்ளார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தண்ணீர் பிரச்சினை

கமல்ஹாசன் டாஸ்மாக் தண்ணீரை போல் குடிநீர் கிடைப்பது இல்லை என்று கூறியுள்ளார். அவர் எந்த நாட்டில் இருந்து கொண்டு பேசுகிறார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் குழாய் திட்டம், கோவில்பட்டி நகராட்சியில் 2-வது குடிநீர் குழாய் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதால் தண்ணீர் பிரச்சினை இல்லை. இந்த நிலையில் கமல்ஹாசன் எந்த மயக்கத்தில் இதனை சொன்னார் என்பது தெரியவில்லை.

மேல்முறையீடு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்பணிகள் வழங்கியதில் ஊழல் நடந்ததாக தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு அவர்களுக்கு எதிராகவே திரும்பும். இதனை காலம் நிச்சயமாக உணர்த்தும். ஏனென்றால், இந்த வழக்கை தொடர்ந்த தி.மு.க.வினர் அவர்கள் ஆட்சி காலத்தில் எந்தெந்த டெண்டரில் எந்தெந்த நிறுவனங்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்தார்களோ இதே முறை தான் தற்போதும் பின்பற்றப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஆட்சி காலத்தில் டெண்டரில் கொடுக்கப்பட்ட தொகையை விட தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் தொகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து ஆதாரமும் அரசிடம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யும். கருணாஸ் எம்.எல்.ஏ. சுயேட்சை போல் செயல்பட்டு வருகிறார். அவர் அனைவரையும் சந்தித்து வருகிறார். அவர் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று உள்ளார். தனி அமைப்பாக இருந்தாலும் சரி எங்கள் சின்னத்தில் நின்றால் தான் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறி தான், கருணாசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் அ.தி.மு.க. கொறடாவிற்கு கட்டுப்பட்டவர். யாரை சந்திப்பது என்பது அரசியலில் சாதாரண நடைமுறை. அதனை மீறி வேறுவிதமான நடவடிக்கையில் தொடர்ந்து செயல்பட்டால் அரசின் கொறடா உத்தரவிற்கு அவர் கட்டுப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புனித நீராடினார்

இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ முறப்பநாடு சென்றார். அங்கு மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்கங்கை என்று அழைக்கப்படும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராட வரும் பக்தர்களின் வசதிக்காக, ரூ.55 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று அனைத்து படித்துறைகளிலும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தாமிரபரணி மகா புஷ்கர விழா, அரசு விழாவாக நடைபெறாவிட்டாலும், அனைத்து படித்துறைகளிலும் சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. புஷ்கர விழா வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. பாபநாசம் கோவில் படித்துறை பழுதடைந்த நிலையில் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story