குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனம்: யாழ்ப்பாணத்தில் 80 சதவீத நிலம் தமிழர்களிடம் திரும்ப ஒப்படைப்பு இலங்கை மந்திரி சுவாமிநாதன் தகவல்


குலசேகரன்பட்டினம் கோவிலில் சாமி தரிசனம்: யாழ்ப்பாணத்தில் 80 சதவீத நிலம் தமிழர்களிடம் திரும்ப ஒப்படைப்பு இலங்கை மந்திரி சுவாமிநாதன் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2018 3:15 AM IST (Updated: 14 Oct 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

யாழ்ப்பாணத்தில் 80 சதவீத நிலம் தமிழர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக இலங்கை மந்திரி சுவாமிநாதன் கூறினார்.

குலசேகரன்பட்டினம், 

யாழ்ப்பாணத்தில் 80 சதவீத நிலம் தமிழர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக இலங்கை மந்திரி சுவாமிநாதன் கூறினார்.

சாமி தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இலங்கை நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி சுவாமிநாதன் நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் சுவாமி-அம்பாளை ஒன்றாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. இதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களது கருத்து. முருகன் அருளால் யாழ்ப்பாணத்திலும், இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் தமிழர்கள் நன்கு வாழ்ந்து, இந்து மதத்தை கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

80 சதவீத நிலம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழர்களிடம் 80 சதவீத நிலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்னும் சிறிய பகுதிதான் ராணுவத்தின் வசம் உள்ளது. அதனை வருகிற டிசம்பர் மாதம் 31-ந்தேதியில் இருந்து தமிழர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

இன்று மட்டும் அல்ல, பல ஆண்டுகளாக இந்திய அரசு இலங்கைக்கு உதவி வருகிறது. அதற்கு இந்திய அரசுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களின் பூர்வீக அடையாளம் ஒரு நாளும் அழியாது. அதனை யாரும் அழிக்க முடியாது. அது அழிந்தாலும் திரும்பி வரும். அதைப்பற்றி யாரும் பயப்பட வேண்டாம். இந்து மத பூர்வீகத்தையும் யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு மந்திரி சுவாமிநாதன் கூறினார்.

முன்னதாக, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, தாசில்தார் தில்லைப்பாண்டி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், தொழில் அதிபர் சிவனேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story