திருப்புடைமருதூர்-பாபநாசத்தில் புஷ்கர விழா: அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி புனித நீராடினர்
திருப்புடைமருதூர், பாபநாசத்தில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.
விக்கிரமசிங்கபுரம்,
திருப்புடைமருதூர், பாபநாசத்தில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.
அமைச்சர்கள் பங்கேற்பு
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆற்றுப்படித்துறைகளில் தாமிரபரணி நதிக்கு சிறப்பு ஆரத்தி மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூரில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை வந்திருந்தார். இதையொட்டி நாறும்பூநாத சுவாமி கோவில் படித்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கி புனித நீராடினார். பின்னர் அங்கு நடந்த ஆராதனை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, தாமிரபரணி ஆற்றுக்கு சிறப்பு ஆரத்தி காட்டினார். அதனை தொடர்ந்து நாறும்பூநாத சுவாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதேபோல் பாபநாசத்தில் சித்தர் கோட்டங்களின் சார்பில் நடைபெற்று வரும் புஷ்கர விழாவில் கலந்துகொள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று வந்தார். அங்கு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். பின்னர் மலர் தூவியும், தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்தினார். முன்னதாக அவரை, சித்தர் கோட்டத்தை சேர்ந்த ரஜினீஸ்வரர் வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே இயற்கை மூலிகை நிறைந்துள்ளது. இதில் குளித்தால் நமக்கு இயல்பாகவே ஆரோக்கியம் கிடைக்கும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் புனித நீராடினால் வாழ்வில் சுபிட்சம் கிடைக்கும் என்று ஐதீகம் சொல்கிறது. தனுசு ராசிக்காரர்கள் இன்று நீராட வேண்டிய நாள் என்பதால் (அதாவது நேற்று) நான் இங்கு நீராட வந்தேன். எனக்கு தனுசு ராசி என்பதால் இங்கு நீராடி சாமி தரிசனம் செய்தேன். எந்த நாட்டில் ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை கூடுகிறதோ அந்த நாட்டில் குற்றங்கள் குறையும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இங்கு வந்து குளித்ததால் மனநிறைவுடன் சாமி தரிசனம் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரதநாட்டியம்
பின்னர் மாலை 6 மணிக்கு சித்தர் கோட்டம் சார்பில் நடந்த பள்ளி மாணவிகளின் பரதநாட்டியத்தை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். அமைச்சருடன் நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு திரளான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்கள்.
Related Tags :
Next Story