மலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள்; விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்,
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குன்னூர்மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும், கோத்தகிரி– மேட்டுப்பாளையம் மலைப்பாதையையும் பயன்படுத்தி வருகின்றனர்.
சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக இளைஞர்கள் இந்த மலைப்பாதையின் தன்மையை உணராமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள். குன்னூர்– மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்பட அபாயகரமான வளைவுகளும் உள்ளன.
இந்த சாலையில் வாகன ஓட்டிகள் 2–வது கியரில்தான் செல்ல வேண்டும் என போலீசார் எச்சரித்தும் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர். ஆனால் சமவெளி பகுதியில் இருந்து வரும் இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குகின்றனர். ஒரு சில இளைஞர்கள் மது அருந்திவிட்டும் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது.
சமீபத்தில் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்தை தவிர்க்க நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். கொண்டை ஊசிவளைவிலும், இறக்கத்தில் செல்லும்போதும் 2–வது கியரில்தான் செல்ல வேண்டும்.
குடிபோதையில் வாகனங்களை இயக்குகிறார்களா? என்பதை போலீசார் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும், மலைப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து முறையாக வாகனங்களை இயக்க அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த மலைப்பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
மேலும் முக்கிய இடங்களில் எச்சரிக்கை பலகை அமைத்து சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நீலகிரிக்கு மலைப்பாதையில் வரும் வாகனங்கள் விபத்து இல்லாத மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.