அலுவலக ஆவணங்களை வெளிநபர்களிடம் வழங்கிய கூடலூர் நகராட்சி வருவாய் உதவியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


அலுவலக ஆவணங்களை வெளிநபர்களிடம் வழங்கிய கூடலூர் நகராட்சி வருவாய் உதவியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

அலுவலக ஆவணங்களை வெளிநபர்களிடம் வழங்கி கூடலூர் நகராட்சி பெண் வருவாய் உதவியாளர்கள் 2 பேரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் பார்வதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் 21 வார்டுகள் உள்ளது. இங்கு ஆணையாளர் தலைமையில் பொறியாளர், மேலாளர், பணி மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் உள்பட வருவாய் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் வெளிநபர்களுக்கு வழங்குவதாக ஆணையாளர் பார்வதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. அதில் அலுவலக ஆவணங்களை வெளிநபர்களுக்கு வழங்கியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளர்களாக பணியாற்றி வந்த மகேஸ்வரி, சித்ரா ஆகிய 2 பேரை ஆணையாளர் பார்வதி தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது குறித்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பார்வதி கூறியதாவது:–

நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் வெளிநபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் இருந்து வெளிநபர்களுக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. மேலும் நிர்வாக ரீதியாக செயல்பட விடாமல் ஆணையாளருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தியதால் நகராட்சி வருவாய் உதவியாளர்கள் மகேஸ்வரி, சித்ரா ஆகியோர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான ஆணையை அவர்களிடம் வழங்கியபோது மகேஸ்வரி மட்டும் பெற்று கொண்டார். சித்ரா வாங்கவில்லை. இதனால் அவரின் வீட்டு கதவில் ஆணை நகல் ஒட்டப்பட்டு உள்ளது. தக்க ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி அலுவலகத்தில் பெண் உதவியாளர்கள் 2 பேர் ஒரே சமயத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story