கரியமலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு


கரியமலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 11:00 PM GMT (Updated: 13 Oct 2018 7:41 PM GMT)

கரியமலையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்த்தனர். இதற்கிடையே மதுக்கடையை திறக்க கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் பஜாரில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த 2 டாஸ்மாக் மதுகடைகள் கோர்ட்டு உத்தரவுபடி சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் பிக்கட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மஞ்சூரை அடுத்த கரியமலை கிராமம் அருகே இயங்கி வந்த தனியார் பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த கட்டிடத்தில் டாஸ்மாக் மதுக்கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 20–க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு இந்த பழைய பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை சுமார் 11 மணி அளவில் மதுக்கடை திறக்கப்படும் என கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கரியமலை கிராம மக்கள் மதுகடை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கரியமலை ஊர் தலைவர் போஜன் தலைமையில் மஞ்சூர் போலீஸ் நிலையம் சென்று மதுகடை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அறிவுறுத்தலின்படி பள்ளி கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்காக கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை ஊழியர்கள் எடுத்து சென்றனர். மதுகடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே டாஸ்மாக் மதுக்கடையை மீண்டும் திறக்க கோரி மஞ்சூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:–

மஞ்சூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இல்லாததால் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் சுமார் 7 கி.மீ. தொலைவில் பிக்கட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று வருகின்றனர். இதனால் மஞ்சூர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுதாக கூறப்படுகிறது. இதையடுத்து மஞ்சூரில் மீண்டும் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கலெக்டரிடம் நேரில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கரியமலை பகுதியில் மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் மதுக்கடை திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடை திறப்பது கைவிடப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மதுக்கடையை ரத்து செய்ததை கண்டித்தும் மஞ்சூர் பகுதியில் மீண்டும் மதுக்கடை திறக்க வலியுறுத்தியும் மஞ்சூரில் வியாபாரிகள் நேற்று மாலை 3 மணி முதல் 4 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியது.


Next Story