போலீசார் வீர மரணம்: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி


போலீசார் வீர மரணம்: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 Oct 2018 4:15 AM IST (Updated: 14 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரின் வீர மரணம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊட்டி,

பணியின்போது வீர, தீர செயல் புரிந்து வீர மரணம் அடைந்த போலீசார் மற்றும் ஆயுதப்படையினருக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21–ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழக போலீஸ் டி.ஜி.பி. தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் போலீசாரின் வீர மரணம் குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

இந்த உத்தரவின்படி, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா மேற்பார்வையில் நீலகிரி முழுவதும் போலீசார் அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் போலீசார் மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான லாரன்ஸ் பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் 48 பேர் கலந்துகொண்டு பேண்ட் வாத்தியங்களை இசைத்தனர்.

பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்த நிகழ்ச்சி எதற்காக நடத்தப்படுகிறது என்று போலீசாரிடம் கேட்டனர். அதற்கு போலீசார், போலீசாரின் வீர மரணம் மற்றும் தியாகம் குறித்து கூறிய போது, பலர் தங்களது வணக்கத்தை தெரிவித்தனர்.

பேண்ட் வாத்திய நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். இதில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி ரோஜா பூங்காவில் பேண்ட் வாத்திய நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

வீர மரணம் அடைந்த போலீசாரின் நினைவு நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. போலீசாரின் பணி மற்றும் போக்குவரத்து குறித்து மாணவர்கள் ஓவியங்களை வரைந்தனர்.

இந்த போட்டியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டி நடந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற 21–ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.


Next Story