பிசான பருவத்தில் அனைத்து விவசாயிகளும் நெல் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் பிசான பருவத்தில் அனைத்து விவசாயிகளும் நெல் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பிசான பருவத்தில் அனைத்து விவசாயிகளும் நெல் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிசான சாகுபடி
நெல்லை மாவட்டத்தில் பருவமழை தொடங்கி உள்ளதால் பிசான நெல் சாகுபடி செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த பருவத்தில் 2018-19-ம் ஆண்டு 58,500 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு பருவமழை 12 சதவீதம் கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளதால், பிசான நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்வது மிகவும் அவசியம் ஆகும்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் 2018-19-ம் ஆண்டிற்கான பிசான நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்யலாம். நெல்லை மாவட்டத்தில் 576 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
பொது சேவை மையங்கள்
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும்போது கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக மாவட்டம் முழுவதும் 120 பொது சேவை மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது.
இந்த காப்பீடு திட்டம் சோழ மண்டல பொது காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. காப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.388 பிரிமியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30-ந்தேதி கடைசிநாள்
பிசான நெல் பயிர் காப்பீடு செய்ய அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். எனவே பிசான நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் காப்பீடு செய்யும் கடைசி நாளை எதிர்பார்க்காமல் நெல் நாற்று விட்டவுடன் முன்எச்சரிக்கையாக பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் பிரிமியம் தொகை செலுத்தி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story