கும்பகோணம் அருகே காவிரி ஆற்று பாலத்தில் பள்ளம் போக்குவரத்து தடை


கும்பகோணம் அருகே காவிரி ஆற்று பாலத்தில் பள்ளம் போக்குவரத்து தடை
x
தினத்தந்தி 13 Oct 2018 10:30 PM GMT (Updated: 13 Oct 2018 7:50 PM GMT)

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றின் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2004-ம் ஆண்டு மகாமக திருவிழாவின் போது, அப்போதைய தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா புறவழிச்சாலையை அமைத்தார்.

தாராசுரத்தில் தொடங்கி செட்டிமண்டபம் வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.24.9 கோடி செலவில் இந்த சாலையும், அரசலாறு மற்றும் காவிரி ஆறுகளின் குறுக்கே பாலங்களும் கட்டப்பட்டது.

அப்போது செட்டிமண்டபம் காவிரி ஆற்றின் குறுக்கே 60 மீட்டர் நீளத்திலும் 5.6 மீட்டர் அகலத்திலும் பாலம் கட்டப்பட்டது. இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டதில் இருந்து கும்பகோணம் நகரின் வடக்கு பகுதிக்கும் கிழக்கு, மேற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் நகரின் உள்ளே வராமல் பாலம் வழியாக சென்று வந்தது. இதனால் கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

கடந்த சில நாட்களாக இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் செட்டிமண்டபம் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலமும், சாலையும் இணையும் இடத்தில் சுமார் ஒரு மீட்டர் சுற்றளவுக்கு சாலை உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் பிரதீப்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட என்ஜீனியர் கல்யாணசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) பூங்குழலி, வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் அன்பழகன் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு சென்று பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இது குறித்து உதவி கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:-

கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் காவிரி ஆற்றுப்பாலமும் சாலையும் இணையும் இடத்தில் மண் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சரிசெய்யும் பணி உடனடியாக தொடங்கப்பட்டு பள்ளத்தில் மண் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு இந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story