தொழில்நுட்பம், அறிவை பயன்படுத்தி விவசாயத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் கமல்ஹாசன் பேச்சு


தொழில்நுட்பம், அறிவை பயன்படுத்தி விவசாயத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2018 4:45 AM IST (Updated: 14 Oct 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்பம் மற்றும் அறிவை பயன்படுத்தி விவசாயத்தை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் என ராசிபுரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இளைஞர் மேம்பாடு மற்றும் தலைமைத்துவம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஊக்குவித்தல் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை தாங்கினார். தாளாளர் மங்கை நடராஜன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், பொருளாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசியதாவது:-

எனக்கு தொண்டர்கள் தேவை இல்லை. தலைவர்கள் வேண்டும். அதனால் தான் கல்லூரி, கல்லூரியாக தலைவர்களை திரட்டி வருகிறேன். மனங்களை திறப்பதற்கு அரிய கருவி உரையாடல் தான். பெற்றோர்கள் அதை தொடர்ந்து வீட்டில் செய்துவந்தால் பல குடும்பங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். பல குடும்பங்கள் செய்ய தவறவிட்டதை ஒரு கல்வி நிறுவனம் செய்வது பாராட்டுக்கு உரியது.

உங்கள் மனதிற்கு உங்கள் வாழ்க்கையை எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என தோன்றுகிறதோ, உங்கள் மனதிற்கு எத்தகைய கல்வி வேண்டும் என தோன்றுகிறதோ அதை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும்.

அறிவியல் முக்கியம் தான். ஆனால் விவசாயமும் தேவை. விவசாயத்தை உங்களின் தொழில்நுட்பம் மற்றும் அறிவை பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். அது உங்களின் கடமை. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதும் அவசியம். அப்துல் கலாமை போல் நீங்கள் எல்லோரும் இருக்க வேண்டும். நாளை உங்களுக்கு கல்வி கை கொடுக்கும். நான் படித்து இருந்தால் என் கலை இன்னும் மேம்பட்டு இருக்கும். அந்த வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

என்னை பொறுத்தவரை நான் வாழ்வையும், சாவையும் வாழ்க்கையின் அங்கமாகவே பார்க்கிறேன். நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஒரு அற்புத முற்றுப்புள்ளி மரணம். அதை வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொண்டால் நீங்கள் போடும் எல்லாம் திட்டமும் சரிவர நடக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கால அட்டவணை போட்டு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

உங்களுக்கு செல்போன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அது உடல்நல பாதிப்பு ஏற்படும் அளவிற்கு இருக்கக் கூடாது. போன் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஒருவரோடு ஒருவர் பேசுங்கள், உரையாடுங்கள். அதில் கிடைக்கும் ஞானத்தை எந்த சமூக வலைதளமும் தராது.

அரசியல் உங்கள் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருக்கும். அது உங்கள் ஏற்றத்துக்கும் தாழ்வுக்கும் கூட காரணமாக இருக்கும். அதனால் வெகு ஜாக்கிரதையாக நீங்கள் உங்களை சூழ்ந்திருக்கும் அரசியலை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசியல் அசிங்கம் என ஒதுங்கி போகாதீர்கள். நீங்கள் ஒதுங்கினால் இன்னும் அது சமூகத்திற்கு பயனற்றதாக போகும். நீங்கள் நன்றாக யோசித்து நல்ல கட்சியை, ஆட்களை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்தால் போதாது. ஓட்டுக்கு காசு வாங்கும் தாத்தா, பாட்டிகளை நீங்கள் மாற்ற வேண்டும்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்து கூறியதாவது:-

விவசாயம் தற்போது அழிந்து வருகிறது. ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புதிதாக விளைநிலங்களை உருவாக்கி உள்ளனர். உன்னால் முடியும் என்றால் தமிழகத்தாலும் முடியும் என்ற சொல்லும் பெருமையும், பழமையும், சரித்திர ஞானமும் தமிழனுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். கல்வியாக இருந்தாலும், விவசாயமாக இருந்தாலும் அது இங்கிருந்து எடுக்கப்பட வேண்டும்.நீங்கள் முதல்- அமைச்சரான உடன் போடும் முதல் கையெழுத்து என்ன? ஊழலை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? என என்னிடம் கேட்கிறீர்கள். ஏமாறாமல் இருப்பதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அரசியல் சூழல் அனுமதித்தால் லோக் ஆயுக்தா பைலில் கையெழுத்திடுவேன். ஏழை, ஏழையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்பட்டால் யாரும் ஏழை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story