தொண்டு செய்ய விரும்பியவர்களால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன: கவர்னர் மாளிகை மூலம் பணம் எதுவும் பெறவில்லை - கவர்னர் மறுப்பு


தொண்டு செய்ய விரும்பியவர்களால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன: கவர்னர் மாளிகை மூலம் பணம் எதுவும் பெறவில்லை - கவர்னர் மறுப்பு
x
தினத்தந்தி 13 Oct 2018 11:45 PM GMT (Updated: 13 Oct 2018 8:23 PM GMT)

தொண்டு செய்ய விரும்பியவர்களால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. கவர்னர் மாளிகை மூலம் பணம் எதுவும் பெறப்படவில்லை என்று முதல்-அமைச்சரின் புகாருக்கு கவர்னர் கிரண்பெடி மறுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகையில் ரூ.85 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் உள்ள வாய்க்கால்கள் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. தற்போது பருவமழை பெய்ய தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு வசதியாக தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தற்போது கால்வாய் மற்றும் வாய்க்கால்களில் 25 வழித்தடங்கள் மூலம் 84 கி.மீ. தூரத்துக்கு தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. தொண்டு செய்ய விரும்புவோர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பணிக்காக நாங்கள் பணம் எதுவும் பெறவில்லை. கவர்னர் மாளிகை மூலம் ஒரு காசோலை கூட பெறப்படவில்லை.

தூர்வாரப்படுவதற்கான நிதி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்பட்டு வருகிறது. நான் கவர்னர் பதவியில் இருந்து சென்றாலும் புதுவை நீர் இல்லாமல் தவிக்கும் மாநிலமாக மாறாது. சி.எஸ்.ஆர். (சமூக பொறுப்புணர்வு) நிதி இதில் வராது. தூர் வாரும் பணிக்காக எனது வேண்டுகோளை ஏற்று பலர் நேரடியாக இந்த பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். வரும் காலங்களிலும் பலரின் நிதி உதவியுடன் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கவர்னர் கிரண்பெடி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக எவ்வளவு நிதி தரப்பட்டுள்ளது?

பதில்:- அதுபற்றி எனக்கு தெரியவில்லை. விரைவில் அதை சேகரித்து தருகிறேன்.

கேள்வி:- இந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகையில் ரூ.85லட்சம் வரை முறைகேடு நடைபெற்று இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாரே?

பதில்:- குற்றச்சாட்டு குற்றச்சாட்டாகவே இருக்கும்.

கேள்வி:-கவர்னரின் ஆலோசகர் நியமனம் தொடர்பாகவும் குற்றம்சாட்டி உள்ளாரே?

பதில்:- தேவநீதிதாஸ் ஓய்வு பெற்ற பிறகும் அவர் பணியில் தொடர வேண்டும் என நான் விரும்பினேன். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதலின் பேரில்தான் அவர் பணி அமர்த்தப்பட்டார். எனது ஆலோசகர், கவர்னரின் சிறப்பு அதிகாரி என்ற பெயரில் அவரை பணியமர்த்த நிதித்துறை ஒப்புதல் தந்தது. இதற்கான உத்தரவுகளை தலைமைச் செயலாளர் தான் பிறப்பித்தார். யூனியன் பிரதேச சட்டப்படி அவர் பணியில் நீடிக்கிறார். நியமிக்கும் அதிகாரம் எனக்குதான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story