தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் பாபுசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் பொதுச்செயலாளர் இளங்கோ தொடங்கி வைத்தார். இதில் மாநில தலைவர் பொன்முடி, நிர்வாகிகள் திருஞானகணேசன், பாலதண்டாயுதம், அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். அரசாணை எண் 101–ல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஷரத்துகளை உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும். பணி பதிவேடுகளை பராமரிக்கும் அதிகாரத்தை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காலி பணியிடங்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். புதிதாக தரம் உயர்த்தப்படும் 100 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களையும், தற்போது காலியாக உள்ள பணியிடங்களையும் நிபந்தனையை தளர்த்தி கலந்தாய்வு மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வுபெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
19 ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து சிறப்பு நிலை பெறமுடியாமல் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோருக்கு கீழ்நிலை பதவியில் பணிபுரிந்த காலத்தையும் கணக்கில் எடுத்து கொண்டு தேர்வு நிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.