களைகட்டிய மைசூரு தசரா விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க குவியும் சுற்றுலா பயணிகள்


களைகட்டிய மைசூரு தசரா விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க குவியும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா விழாவையொட்டி பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டுரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மைசூரு, 

மைசூரு தசரா விழாவையொட்டி பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை கண்டுரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மைசூரு தசரா விழா களைகட்டி வருகிறது.

சாப்பாடு போட்டி

மைசூரு தசரா விழா கடந்த 10-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. தசரா விழாவையொட்டி அரண்மனை தர்பார் மண்டபத்தில் இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

மேலும் மைசூரு குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு மலர்களால் வடிவமைக்கப்பட்ட வனவிலங்குகள், பூச்செடிகளை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அதுபோல் தசரா விழாவையொட்டி மைசூரு மூடா மைதானத்தில் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகத்தின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் சாப்பாடு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சிறுவர், சிறுமிகளுக்கு சாப்பாடு போட்டி நடந்தது. அதாவது பிஸ்கெட், வாழைப்பழம் சாப்பிடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு போட்டி போட்டு பிஸ்கெட், வாழைப்பழங்களை ருசித்து சாப்பிட்டது அனைவரையும் கவர்ந்தது. மேலும் பெண்களுக்கு மைசூருபாகு சாப்பிடும் போட்டியும் நடந்தது.

ஹெலி ரைடு சேவை தொடக்கம்

தசரா விழாவையொட்டி மைசூரு பன்னிமண்டப மைதானத்தில் மைசூருவின் முக்கிய சுற்றுலா தலங்கள், நகரின் அழகை ஹெலிகாப்டரில் பறந்தபடி கண்டு ரசிக்கும் வகையில் அரசு சார்பில் ‘ஹெலி ரைடு‘ என்னும் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதனை மாநில உயர்கல்வித் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஜி.டி.தேவேகவுடா கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா துறை மந்திரி சா.ரா.மகேஷ், கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் மற்றும் தசரா விழா கமிட்டியினர் கலந்துகொண்டனர். இந்த ஹெலிரைடு சுற்றுலா திட்டம் 22-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

அதுபோல் மைசூரு நகரையும், சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்கும் வகையில் சாரட் (குதிரை) வண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதனை மைசூரு அரண்மனை கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன்பு மந்திரி சா.ரா.மகேஷ் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாரட் வண்டிகளில் பேட்டரிகள் பொருத்தி மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

விவசாய தசரா

மைசூரு ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜே.கே.மைதானத்தில் விவசாய தசரா விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. நேற்று காலை விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதாவது பெண்களுக்கு குடங்களில் தண்ணீர் நிரப்பி தூக்கி செல்லுதல், ஸ்பூனில் எலுமிச்சை பழத்தை வைத்து வாயில் தூக்கி செல்லுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும், ஆண்களுக்கு சாக்கு ஓட்டம், உரம் மூட்டைகளை தூக்கிச் செல்லுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தசரா விழாவையொட்டி மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் இளைஞர் தசராவை நேற்று முன்தினம் முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கிவைத்தார். அங்கு நேற்று பிரபல பின்னணி பாடகர்களின் இன்னிசை கச்சேரி நடந்தது. மேலும் நடன நிகழ்ச்சியும், பாட்டுப்போட்டியும் நடத்தப்பட்டது. அத்துடன் மைசூரு சாமுண்டி மலையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.

சுற்றுலா பயணிகள் வருகை

மைசூரு தசரா விழாவின் நிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதனால் மைசூருவில் நடைபெறும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுரசிக்க கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டினரும் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மைசூரு தசரா விழா களைகட்டி வருகிறது.

நேற்று முன்தினம் மாலை முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ் ஆகியோர் மேற்கூரை இல்லாத பஸ்சில் மைசூரு நகரை சுற்றி பார்த்தனர்.

Next Story