கர்நாடகத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம்; மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணிப்பு
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மந்திரிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணித்தார்.
பெங்களூரு,
இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மந்திரிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணித்தார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மந்திரிகளுடன் ஆலோசனை
கர்நாடகத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர் கொள்கிறது. சட்டசபை தொகுதிகளான ராமநகரில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. அதுபோல பல்லாரி, மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளில் பல்லாரியில் காங்கிரசும், மண்டியாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
ஆனால் சிவமொக்கா தொகுதியில் யார்? போட்டியிடுவது என்பதில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில், மாநிலத்தில் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாகவும், காங்கிரஸ் போட்டியிடும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் பெங்களூருவில் நேற்று காலை காங்கிரஸ் மந்திரிகளுடன், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்கள்.
ராகுல்காந்தியுடன் ஆலோசித்து...
குறிப்பாக பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. அதுதொடர்பாக மந்திரிகளுடன் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். மேலும் மந்திரிகளின் கருத்தையும் கேட்டு தலைவர்கள் அறிந்து கொண்டனர். அதே நேரத்தில் ஜமகண்டி தொகுதியில் சித்து நியாமகவுடாவின் மகன் ஆனந்த் நியாமகவுடாவை வேட்பாளராக நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதா? அல்லது ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு அந்த தொகுதியை விட்டு கொடுப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதுபற்றியும், பல்லாரி தொகுதியின் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது பற்றியும் ராகுல்காந்தியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்பது குறித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதுதவிர மந்திரி பதவியை என்.மகேஷ் ராஜினாமா செய்திருப்பது குறித்தும் மந்திரிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்தனர். என்.மகேஷ் ராஜினாமா பின்னணியில் பா.ஜனதா இருக்கலாம் என்றும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் மந்திரிகளிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.
ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணிப்பு
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளிலும் பா.ஜனதாவினர் எக்காரணத்தை கொண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது என்றும், அதற்கு ஏற்றார் போல தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும் மந்திரிகளுக்கு வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் ராமநகர் தொகுதியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு விட்டு கொடுத்திருப்பதால், அந்த மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களை சமாதானப்படுத்தவும் சித்தராமையா, டி.கே.சிவக்குமாரிடம் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆலோசனை கூட்டத்தில் பல்லாரி நாடாளுமன்ற தொகுதியின் பொறுப்பாளராக மந்திரி டி.கே.சிவக்குமாரையும், ஜமகண்டி சட்டசபை தொகுதியின் பொறுப்பாளராக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரையும் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், மந்திரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி புறக்கணித்து விட்டார். காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதானல் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story