உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது


உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவன் கொலை தாய்-கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 14 Oct 2018 3:30 AM IST (Updated: 14 Oct 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவனை கொலை செய்ததாக தாய் மற்றும் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளேகால், 

உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் ஏரியில் மூழ்கடித்து சிறுவனை கொலை செய்ததாக தாய் மற்றும் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவன் மாயம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலகா சிலுகலுபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. இவருடைய மனைவி சாக்கம்மா. இந்த தம்பதியின் மகன் மகாதேவபிரபு என்கிற பிரீத்தம் (வயது 7). இவன் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரீத்தம், வெளியே விளையாட சென்றான். ஆனால், வெகு நேரமாகியும் அவன் வீட்டுக்கு திரும்ப வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நஞ்சுண்டசாமி, அவனை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர், கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.

ஏரியில் பிணமாக மீட்பு

இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் சிறுவனின் உடல் மிதப்பதாக கொள்ளேகால் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவன் மாயமான, நஞ்சுண்டசாமி என்பவரின் மகன் பிரீத்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பிரீத்தம், தவறி விழுந்து இறந்தானா? அல்லது யாராவது கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் அவனுடைய உடலில் காயங்கள் இருந்ததால், அவனை யாரோ மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

கொலை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கொள்ளேகால் துணை போலீஸ் சூப்பிரண்டு புட்டமாதய்யா, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் வனராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த, மகேஷ் என்பவர், சிறுவன் மாயமான அன்று அவனை அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், நாகராஜ மூர்த்தியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, சிறுவன் பிரீத்தமை, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்ததை நாகராஜ மூர்த்தி ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உல்லாசம் அனுபவித்ததை...

நஞ்சுண்டசாமியின் மனைவி சாக்கம்மாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி நஞ்சுண்டசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் நாகராஜ மூர்த்தியும், சாக்கம்மாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த சமயத்தில், சிறுவன் பிரீத்தம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது, தாயும், நாகராஜ மூர்த்தியும் அரைகுறை ஆடைகளுடன் உல்லாசமாக இருப்பதை பிரீத்தம் பார்த்துள்ளான்.

இதனை பார்த்து அவர்கள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவன் பிரீத்தம், தங்கள் கள்ளத்தொடர்பு விவகாரம் பற்றி வெளியே கூறிவிடுவானோ என்று 2 பேரும் பயந்துள்ளனர். மேலும், சிறுவன் பிரீத்தமை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாகராஜ மூர்த்தி சிறுவன் பிரீத்தமை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கிராமத்தையொட்டி உள்ள ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர், சிறுவனின் உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டபோது, சாக்கம்மாவும், நாகராஜ மூர்த்தியும் எதுவும் தெரியாதது போல பிரீத்தமின் உடலை பார்த்து அழுதுள்ளனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தாய்-கள்ளக்காதலன் கைது

இதையடுத்து கொள்ளேகால் டவுன் போலீசார் நாகராஜ மூர்த்தி மற்றும் சாக்கம்மாவை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story