மராட்டியத்தில், கடந்த 11 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு 56 பேர் பலி சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
மராட்டியத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு 56 பேர் உயிரிழந்து உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 11 நாட்களில் மட்டும் பன்றிக்காய்ச்சலுக்கு 56 பேர் உயிரிழந்து உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பன்றிக்காய்ச்சல்
மராட்டியத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 216 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் 160 உயிரிழப்புகள் கடந்த மாதம் ஏற்பட்டவை ஆகும். அதிகபட்சமாக நாசிக்கில் 69 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புனேயில் 41 பேரும், பிம்பிரி சிஞ்ச்வாட்டில் 32 பேரும் பலியாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த மாதத்தில் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கடந்த 11-ந் தேதி வரையில் மட்டும் 56 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்து உள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. இதில் 11-ந் தேதி மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆகும்.
51 பேர் கவலைக்கிடம்
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் 51 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் சஞ்சீவ் காம்பிளே கூறுகையில், ‘‘மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கு காய்ச்சல் ஏற்பட்ட உடன் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேரும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
இதன் மூலம் உயிரிழப்புகளை தடுக்க முடியும். ஆனால் காய்ச்சல் முற்றிய நிலையில் தான் பலரும் சிகிச்சைக்கு வருகிறார்கள்’’ என்றார்.
Related Tags :
Next Story