பள்ளிக்கரணையில் மனைவி கத்தியால் குத்திக்கொலை போலீஸ் நிலையத்தில் கணவர் சரண்


பள்ளிக்கரணையில் மனைவி கத்தியால் குத்திக்கொலை போலீஸ் நிலையத்தில் கணவர் சரண்
x
தினத்தந்தி 13 Oct 2018 10:22 PM GMT (Updated: 13 Oct 2018 10:22 PM GMT)

பள்ளிக்கரணையில், மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பாரதிதாசன் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 51). இவர், வேளச்சேரியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோஸ்மேரி என்ற மகாலட்சுமி(45). இவர்களுக்கு குணால் (19), திரிஷ் (17) என 2 மகன்கள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஆட்டோ வாங்க மகாலட்சுமி கடனுதவி செய்ததாக தெரிகிறது. இதனால் அவருடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ? என மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கிருஷ்ணமூர்த்தி, இது தொடர்பாகவும் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கத்தியால் குத்தினார்

நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கணவரை மகாலட்சுமி கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதில் கிருஷ்ணமூர்த்தி கடும் ஆத்திரம் அடைந்தார்.

பின்னர் அனைவரும் தூங்கச்சென்றுவிட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் எழுந்த கிருஷ்ணமூர்த்தி, அப்போதும் ஆத்திரம் அடங்காததால் சமையல் அறைக்கு சென்று அங்கு காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மகாலட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்தம் வெளியேறி மகாலட்சுமி அலறினார். சத்தம்கேட்டு எழுந்த அவர்களது 2-வது மகன் திரிஷ், அங்கு வந்தான். அப்போது அவன் மீதும் லேசாக கத்தி கீறியது. இந்த அலறல் சத்தம்கேட்டு எழுந்துவந்த மூத்த மகன் குணால் மின்விளக்கை போட்டார்.

உயிரிழந்தார்

அப்போது தாய் மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடியபடி கிடப்பதையும், தந்தை கிருஷ்ணமூர்த்தி கத்தியுடன் நிற்பதையும் கண்டு கடும்அதிர்ச்சி அடைந்தார். உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து வெளியேறினார்.

குணாலும், திரிசும் அக்கம் பக்கத்தினரை அழைத்துவந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு மகாலட்சுமியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசில் சரண்

இதற்கிடையே மனைவியை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய கிருஷ்ணமூர்த்தி, கத்தியுடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலையான மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story