நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வைக்க வாய்ப்பு சரத்பவார் சொல்கிறார்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
சுமுக உறவு இல்லை
மராட்டியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் இடையே சுமுக உறவு இல்லை. இருகட்சிகளும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் மற்றும் மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிவசேனா தேர்தலை தனித்து சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால் பா.ஜனதா தரப்பு கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவே கூறி வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரசின் நிறுவன தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நிலைமை மாறிவிட்டது
நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும், இதன்மூலம் அரசின் நிதி மிச்சப்படுத்தப்படும் என்றும் நரேந்திர மோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. தற்போதைக்கு அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. ஆனால் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் அவர்கள் கைகோர்க்க வாய்ப்பு இல்லை.
இருகட்சிகளும் மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும்போதிலும், அவர்களுக்கிடையே ஒரு இறுக்கமான உறவே உள்ளது.
பேச்சுவார்த்தை
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்தும் விஷயத்தில் எதிர்க்கட்சிகள் 15 நாட்களுக்குள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவோம்.
போபஸ் ஊழல் போலவே, ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு கமிட்டி அமைந்து விசாரணை நடத்தவேண்டும்.
இவ்வாறு சரத்பவார் கூறினார்.
Related Tags :
Next Story